

சென்னை,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில், ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. சில வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டன, கள்ள ஓட்டு போட முயற்சி என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கட்சிகள் கொண்டு சென்றுள்ளன.
இதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இன்று போராட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் என பலர் தங்களுடைய கண்களை கருப்பு துணியால் கட்டி கொண்டு தேர்தல் ஆணையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆட்சியதிகாரத்தை கையில் வைத்திருக்கும் தி.மு.க.வும், பணபலம் கொண்ட அ.தி.மு.க.வும் தேர்தல் ஜனநாயகத்தை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன என்று தெரிவித்து உள்ளார்.
தேர்தல் நாளில் வாக்கு சாவடியிலே பணம் வினியோகம் செய்யப்பட்டது. உச்சகட்ட அநீதியாக வாக்குச்சாவடிகளின் கதவுகளை பூட்டிக்கொண்டு கள்ள ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் இச்செயல்களை தேர்தல் அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை.
தங்கள் வாக்கை பதிவு செய்யவந்த மாற்றுகட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் என நினைத்து பணம் கொடுக்க முயன்றது அவல நகைச்சுவை. உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றி மக்கள் பணத்தை துளி விடாமல் உறிஞ்சுவிட துடிக்கும் கழகங்களின் ஊழல் வெறிக்கு ஜனநாயகம் பலியாகியுள்ளது.
தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும் என அவர் தெரிவித்து உள்ளார்.