“மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க முனைவதா?” - மத்திய பா.ஜ.க. அரசுக்கு வைகோ கண்டனம்

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க முனைவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க முனைவதா?” - மத்திய பா.ஜ.க. அரசுக்கு வைகோ கண்டனம்
Published on

சென்னை,

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;-

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கடந்த ஆகஸ்டு மாதம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசிடம் இருந்து விரைவில் ஒப்புதல் பெறப்படும் என்றும் கர்நாடகாவின் பாசனப் பரப்பை அதிகரிப்பதுதான் தமது அரசின் லட்சியம் என்றும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி எடியூரப்பா பிரதமர் மோடியை சந்தித்து, மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கிட மனு அளித்தார். இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 18ஆம் நாள் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி டெல்லியில், மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்து, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர்களின் சந்திப்புக்குப் பின்னர் மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது ட்விட்டர் பதிவில், 'கர்நாடக மாநில நீர் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கின்றபோது, மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கர்நாடக மாநில நீர் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என்று தெரிவித்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

தமிழகத்திற்கு பச்சைத் துரோகம் இழைக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபடக் கூடாது; மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மேகதாது அணைத் திட்டத்தையே ரத்து செய்திட எடப்பாடி பழனிசாமி அரசு மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com