

நீலகிரி,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன் என்ற வைகுண்ட வாசன் (25). இவர் பிரபல யூ-டியூபர். இவர் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று அதனை யூ-டியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
டி.டி.எப் வாசன் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் சில வழக்குகளில் அபராதமும், நேரில் ஆஜராகி மன்னிப்பு கடிதமும் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் டி.டி.எப் வாசன் விலை உயர்ந்த புதிய பைக் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த பைக்கை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கு பைக் ட்ரிப் சென்றுள்ளார். அப்பொழுது இவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் பைக்கில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. ஊட்டியில் பல இடங்களில் இவர் பைக்கில் வேகமாக வலம் வந்துள்ளார்.
அங்குள்ள ஹில்பங்கு பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது டி.டி.எஃப். வாசன் அப்பகுதியில் வேகமாக தனது பைக்கில் சென்றுள்ளார். போலீசார் அவரை நிறுத்த முயற்சி செய்த நிலையில், டி.டி.எஃப். வாசன் பைக்கை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து டி.டி.எஃப். வாசனை துரத்திப் பிடித்த போக்குவரத்து போலீசார் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனத்தை ஓட்டியதால் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் டி.டி.எஃப். வாசனிடம் பைக்கில் வேகமாகப் பயணிக்கக் கூடாது, அனுமதிக்கப்பட்ட வேகத்தை எக்காரணத்தைக் கொண்டும் தாண்டக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.