மீண்டும் கூட்டணிக்குள் டிடிவி தினகரன்.. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை


மீண்டும் கூட்டணிக்குள் டிடிவி தினகரன்..  மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 21 Jan 2026 11:28 AM IST (Updated: 21 Jan 2026 11:34 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அதிரடியாக அறிவித்திருந்தார்.

சென்னை,

தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. இந்த சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

தற்போது வரை அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக (அன்புமணி), தமாக, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தேமுதிக, அமமுகவை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அதிரடியாக அறிவித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவர் வெளியேறிய நிலையில் மீண்டும் இணைவதாக தெரிவித்திருந்தார்.

சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறோம். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும் நோக்கில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டு கட்சி மற்றும் தமிழ்நாட்டு நலனை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது.

எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற வள்ளுவரின் வாக்குப்படி கூட்டணியை முடிவு செய்துள்ளோம். மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். தமிழகத்தில் நல்லாட்சி அமைய உறுதுணையாக இருப்போம்” என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ்கோயலை, டிடிவி தினகரன் நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்துள்ளநிலையில், மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story