இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு பயம் டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் பயப்படுவதாக டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு பயம் டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
Published on

ஆலந்தூர்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர். தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி.தினகரன் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தாதது குறித்து மாநில அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மழையை காரணமாக வைத்து, திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தக்கூடாது என்று தலைமை செயலாளர் மூலம் தேர்தல் கமிஷனிடம் தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் இதே திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் தேர்தல் நடந்தது.

ஆர்.கே.நகர் தொகுதியிலும் நவம்பர் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு டிசம்பர் மாதம் நடந்தது. அந்த நேரத்தில் கன்னியாகுமரியில் ஒகி புயல் தாக்கியது. ஆனாலும் தேர்தல் ரத்து செய்யப்படவில்லை. இவ்வாறு புயல் காலத்திலும் தேர்தல் நடந்து உள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தும்போதே சந்தேகம் ஏற்பட்டது. அங்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாததால், டெபாசிட் கூட வாங்க முடியாது என்ற எண்ணத்தில்தான் தேர்தலை நிறுத்தி உள்ளனர்.

தேர்தல் கமிஷன் சுதந்திரமாக செயல்படும் அமைப்பு என்றுதான் நினைத்தோம். ஆனால் இடைத்தேர்தலை நடத்தாததற்கு அந்த கமிஷன் கூறும் காரணம் ஆச்சரியமாக உள்ளது. எனவே தேர்தல் கமிஷன், மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறதா? என்று எண்ண தோன்றுகிறது.

இதைப்போல வானிலை மையம் ரெட் அலர்ட் செய்த நாளில் ஒரு சொட்டு கூட மழை பெய்யவில்லை. இதனால் வானிலை ஆய்வு மையமும் அரசியல் செய்கிறதோ? என்ற சந்தேகம் உள்ளது.

இடைத்தேர்தல் விவகாரத்தில் ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் இப்படி என்றால், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வின் நிலைமையோ வேறுமாதிரி உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துவிட்டு, அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. தலைவர் கூறுகிறார். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளின் இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பயப்படுகின்றன. இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று அ.ம.மு.க.வும், தமிழக மக்களும் தான் எதிர்பார்க்கிறோம்.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்தபோது, கல்வித்துறையில் நிறைய புகார்கள் வருவதாக அப்போதைய கவர்னரான வித்யாசாகர் ராவ் என்னிடம் கூறினார். எனவே நான் முதலமைச்சரிடம் சொல்லி உயர்கல்வி செயலாளராக சுனீல்பாலிவாலை நியமிக்குமாறு கூறினேன். அதன்படி அவரை நியமித்தார்கள்.

ஆனால் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் ஊழல் நடந்திருப்பதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். அவர், முந்தைய கவர்னர் வித்யாசாகர் ராவை குறை சொல்கிறாரா? என்று தெரியவில்லை. இந்த ஊழல்கள் குறித்து தற்போது கவர்னர் புகார் கூறுவது ஏன்?

தஞ்சாவூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் திறந்தவெளி சிறைச்சாலை கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி உள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் விழாவில் தற்போதைய கவர்னர் செல்கிறார். இது என்ன நியாயம்?

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com