

சென்னை,
அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று காலை சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அடையாறு இல்லத்திற்கு திரும்பிய அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா ஆட்சிக்கு துரோகம்
என் மீது அமைச்சர்கள் அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார்கள். பொதுச்செயலாளர் சசிகலாவின் காலில் விழுந்து கிடந்தவர்கள் இன்று திட்டுகின்றனர். உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்பவர் எடப்பாடி பழனிசாமி. முதல்-அமைச்சராக்கிய பொதுச்செயலாளருக்கே துரோகம் செய்தவர். இவர் எப்படி தமிழக மக்களுக்கு நன்றியோடு இருப்பார்.
பெருந்தலைவர் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். அமர்ந்த இருக்கையில் ஏதோ ஒரு விதிவசத்தால் நாங்கள் எடப்பாடி பழனிசாமியை அமர வைத்து விட்டோம். இப்போது ஜெயலலிதாவின் ஆட்சிக்கே துரோகம் செய்வதால் நாங்கள் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.
அமைச்சர்கள் மீது ஊழல் புகார்
எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் ஊழல் வழக்கில் சிக்கி உள்ளனர். அவரது உறவினர் ராமலிங்கம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வமும் சேகர்ரெட்டியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு வசூல் செய்தவர்தான். அமைச்சர்கள் மீதும் ஏராளமான ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
ஆட்சி நடத்தும் பெரும்பான்மையை இழந்து விட்டு சிக்கி தவிப்பதால் எங்கள் மீது குறை கூறுகிறார்கள். நான் மீண்டும் சிறைக்கு செல்வேன் என்கிறார்கள். உண்மையிலேயே இன்னும் சில நாட்களில் அனைத்து அமைச்சர்களின் பதவியும் பறிபோக போகிறது. அதன் பிறகு இவர்கள் வீட்டுக்கு போக மாட்டார்கள். மாமியார் வீட்டுக்கு (சிறை) போவது உறுதி.
என் மீது ஊழல் வழக்கு கிடையாது
திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் சசிகலா. அப்போது பதவிக்காக அவரது காலில் விழுந்தவர்தான் திண்டுக்கல் சீனிவாசன். அதையெல்லாம் செய்துவிட்டு, இன்றைக்கு அவர் இப்படி பேசுவதற்கு காரணம், எல்லோருக்கும் அமைச்சர் பதவி போகப்போகிறது.
என் மீது பெரா வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் என்.ஆர்.ஐ. சட்ட சிக்கல் காரணமாக அந்த வழக்கு முடியாமல் உள்ளது.
நான் அமைச்சராக இருந்தது கிடையாது. எம்.பி.யாகத்தான் இருந்தேன். மக்கள் பணத்தை கொள்ளையடித்ததாக என் மீது வழக்கு கிடையாது. நாங்கள் சேகர்ரெட்டி போன்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ஊழல் விவகாரத்தில் சிக்கவில்லை. என் மீது எந்த ஊழல் வழக்கும் கிடையாது. இப்போது எங்களை பார்த்து இவர்கள் ஏக வசனம் பேசுகிறார்கள்.
தொடர்பு வைத்தது யார்?
சி.பி.ஐ. விசாரணை வந்தால், முதலில் சிறை செல்லக்கூடியவர் திண்டுக்கல் சீனிவாசன் தான். சேகர்ரெட்டி, அன்புநாதன் போன்றவர்களுடன் தொடர்பு வைத்தது யார் என்பது மக்களுக்கு தெரியும். சி.பி.ஐ. வழக்கு, வருமான வரித்துறை வழக்கு, அமலாக்கப் பிரிவு வழக்கு என அத்தனையும் இனி இவர்களுக்குத்தான் வரும்.
நான் பலமுறை மாமியார் வீட்டுக்கு (சிறை) சென்று வந்தவன். வழக்குகளை சந்தித்து வெற்றிகரமாக வெளியே வந்தவன். ஆனால் இவர்களை ஆட்சியில் இருந்து வீட்டுக்கு அனுப்பினால் மாமியார் வீட்டுக்குத்தான் போவார்கள். பதவி பறிபோகும் பயத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகிறார்கள்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.