

சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:-
பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று கோரி போராடியபோது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பிய அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழிவாங்கும் நோக்கத்தோடு அவர்கள் மீதான குற்ற குறிப்பாணைகளையும், வழக்குகளையும் கைவிடாமல் இருப்பது சரியானதல்ல.
இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணி ஓய்வு, அதற்கு பிந்தைய பலன்கள் என எதையும் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இப்பிரச்சினையில் தமிழக அரசு மனிதநேயத்துடனும், மனசாட்சியோடும் நடந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.