

சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2-ம் கட்ட திட்டத்தின் பாதை 3-ல்,கீழ்ப் பாக்கம் மருத்துவக்கல்லூரி நிலையத்தில் 'காவேரி' என்ற கீழ்வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் எந்திரம் வெற்றிகரமாக தன்னுடைய பணியை நிறைவு செய்து ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு நிலையம் மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி நிலையம் இடையே சுரங்கம் தோண்டும் பணி, "தாமிரபரணி” மற்றும் "காவேரி' ஆகிய 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்களை பயன்படுத்தி பிப்ரவரி 2024-ல் பணிகள் தொடங்கப்பட்டன.
சேத்துப்பட்டு நிலையம் அருகே சுமார் 18 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள தெற்கு ரெயில்வேயின் பயன்பாட்டில் உள்ள 5 ரெயில் பாதைகள், சேத்துப்பட்டு சுற்றுச்சூழல் பூங்கா ஏரி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியின் பல கட்டிடங்களுக்கு அடியில் 21 முதல் 26 மீட்டர் வரையிலான ஆழத்தில் சுரங்கம் அமைத்தல், தற்போது பயன்பாட்டில் உள்ள சென்னை மெட்ரோ முதற்கட்ட சுரங்கப்பாதைகளுக்கும், 2-ம் கட்ட சுரங்கப்பாதைகளுக்கும் இடையே குறைந்த பட்சம் 6.1 மீட்டர் இடைவெளியை பராமரித்தல் என இந்த பணியின்போது, சுரங்கம் தோண்டும் எந்திரம் பல சவாலான பகுதிகளை வெற்றிகரமாக கடந்து சென்றுள்ளது.
இந்த முழுப்பணியும் நிலச்சரிவோ அல்லது தற்போதைய உள்கட்டமைப்புகளுக்கு எந்தவித பாதிப்போ இன்றி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. சுரங்கம் தோண்டும் பணிகள் 252 நாட்களில் முழுமையடைந்தன.