

ஈரோடு,
தேவை அதிகரிப்பு, வரத்து குறைவால் மஞ்சள் விலை ஒரு குவிண்டால் ரூ.20 ஆயிரத்தை நெருங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு பகுதியில் திங்கள் முதல் வெள்ளி வரை நான்கு பிரதான மார்க்கெட்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது. கடந்த 2024-ல் ஒரு குவிண்டால் (100 கிலோ) மஞ்சள் ரூ.20 ஆயிரத்தைக் கடந்தும், கடந்த ஜூலையில் ரூ.19,150-ஐக் கடந்தும் விற்பனையானது. அதன் பின்னர் ரூ.15,000 - ரூ.17,000-க்குள் விற்பனையானது.
இந்த நிலையில் பழைய மஞ்சள் இருப்பு குறைந்து தேவை அதிகரித்து, விலை உயரத் துவங்கியது. கடந்த 5-ம் தேதி ஈரோடு சொசைட்டியில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.12,399 - ரூ.18,610க்கும், கிழங்கு மஞ்சள் ரூ.9,699 - ரூ.17,139க்கும் விலை போனது. கடந்த செப்டம்பர் 10-ம் தேதிக்கு பின்னர் ரூ.1,600 விலை உயர்ந்து விற்பனையானது.
ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.13,699 - ரூ.19,851க்கும், கிழங்கு மஞ்சள் ரூ.12,099 - ரூ.17,929க்கும் விலை போயின. கடந்த நான்கு நாட்களில் ரூ.1,250 விலை உயர்ந்துள்ளது, விவசாயிகளை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்த விலை உயர்வால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.