

ஈரோடு,
தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி -அரக்கன்கோட்டை வாய்க்கால், காலிங்கராயன் வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
எல்நினோ பருவநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் மழை அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையில் போதிய அளவில் தண்ணீர் இருப்பு இல்லாததால் இந்த ஆண்டு எந்த பாசனங்களுக்கும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மஞ்சள் சாகுபடி பாதியாக குறைந்துவிட்டது.
விவசாயிகள் தங்களிடம் உள்ள பழைய மஞ்சளை தற்போது மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நடப்பு பருவத்தில் மஞ்சள் சாகுபடி, விவசாயிகளிடம் மஞ்சள் இருப்பு குறைந்துள்ளதாலும் தற்போது மஞ்சள் விலை உயர தொடங்கி உள்ளது. இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் புது மஞ்சள் வரத்தானது அதிகபட்சமாக ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.19 ஆயிரத்து 779-க்கு ஏலம் போனது.
கடந்த மாதம் தொடக்கத்தில் ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு குவிண்டால் மஞ்சள் அதைத்தொடர்ந்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. கடந்த 1-ந்தேதி ரூ.17 ஆயிரத்து 969-க்கு விற்பனையான ஒரு குவிண்டால் மஞ்சள் நேற்று ரூ.20 ஆயிரத்து 799-க்கு விற்பனை ஆனது. கடந்த 2 வாரத்தில் மட்டும் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 800 வரை விலை உயர்ந்துள்ளது.
ஈரோடு கூட்டுறவு விற்பனை நிலையத்தில் நேற்று நடந்த ஏலத்தில், ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.19 ஆயிரத்து 419-க்கும், அதிகபட்சமாக ரூ.20 ஆயிரத்து 799-க்கும் விற்பனை ஆனது. இதேபோல் கிழங்கு மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.17 ஆயிரத்து 849-க்கும், அதிகபட்சமாக ரூ.19 ஆயிரத்து 11-க்கும் ஏலம் போனது.
ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடங் கள், ஈரோடு கூட்டுறவு விற்பனை நிலையங்களில் நேற்று நடந்த ஏலத்துக்கு மொத்தம் 2 ஆயிரத்து 425 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் வெறும் 1,435 மூட்டை மஞ்சள் மட்டுமே விற்பனை ஆனது. மேலும் கோபி கூட்டுறவு விற்பனை நிலையத்துக்கு நேற்று மஞ்சள் வரத்து இல்லை.