

ஈரோடு,
தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.
கடந்த ஜூலையில், ரூ.19,150-ஐ கடந்து மஞ்சள் விற்பனையானது. அதன்பின் விலை குறைந்து, ரூ.15,000 முதல் ரூ17,000-க்குள் விற்பனையானது. பழைய மஞ்சள் இருப்பு குறைவால், விலை உயரத் தொடங்கி இருக்கிறது. அதன்படி, ஈரோடு சொசைட்டியில் ஒரு குவிண்டால் விரலி, ரூ12,399 -ரூ18,610, கிழங்கு, ரூ9,699 - ரூ17,139-க்கும் விலை போனது. கடந்த மாதம் 10-ம் தேதிக்கு பின் மஞ்சள் விலை ரூ1,600 வரை உயர்ந்துள்ளது.
இதுபற்றி ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் கூறியதாவது:-
'எல் நினோ' தாக்கத்தால் தேசிய அளவில் மஞ்சள் சாகுபடி குறைந்துள்ளது. கடந்தாண்டும் விளைச்சல் குறைவு என்பதுடன், பழைய மஞ்சள் கையிருப்பில் இல்லை. தேவை அதிகரித்துள்ள நிலையில், கையிருப்பு குறைவால் வரத்து குறைந்து விலை உயர்கிறது. வரும் நாட்களில் தொடர் பண்டிகைகள் வருவதால் மஞ்சள் தேவை மேலும் அதிகரிக்கும். இதனால் நல்ல, தரமான மஞ்சளுக்கான விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு கூறினார்.