போதிய பராமரிப்பின்றி ஆமைக்குஞ்சுகள் உயிரிழப்பு

கடலூர் சில்வர் பீச்சில் போதிய பராமரிப்பின்றி ஆமைக்குஞ்சுகள் உயிரிழந்தன. இதை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதிய பராமரிப்பின்றி ஆமைக்குஞ்சுகள் உயிரிழப்பு
Published on

ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள்

கடலூர் மாவட்ட கடற்கரையோரம் ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் ஆண்டுதோறும் வந்து முட்டையிட்டு செல்கின்றன. இந்த முட்டைகளை பறவைகள், நாய் போன்றவை சாப்பிட்டு வீணாக்கி வந்தது. இதனால் இந்த முட்டைகளை பாதுகாக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் பொரிப்பகம் அமைத்து, அதில் முட்டைகளை வைத்து குஞ்சு பொரித்ததும், கடலில் விட்டு வருகின்றனர். இந்த சேவையை வனத்துறை அலுவலர்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து செய்து வந்தனர். அதன்படி இந்த ஆண்டு இது வரை 160 ஆமைகளில் இருந்து 19 ஆயிரத்து 500 முட்டைகளை சேகரித்தனர். அதில் இது வரை குஞ்சு பொரித்த 8 ஆயிரத்து 250 ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர்.

இறந்து கிடந்தது

இந்நிலையில் தன்னார்வலர்கள் இல்லாமல் வனத்துறையினர் மட்டும் இந்த பொரிப்பகத்தை பாதுகாத்து வந்தனர். ஆனால் அதை முறையாக பராமரிக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் முட்டைகளில் இருந்து குஞ்சு பொரித்து, வெளியே வந்த 50-க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் இறந்து கிடந்தது. இந்த ஆமை குஞ்சுகளை பறவைகள் கொத்தி சாகடித்து விட்டதாக தெரிகிறது. இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, முன்கூட்டியே குஞ்சு பொரித்ததால், தானாக ஆமை குஞ்சுகள் வெளியே வந்து விட்டதாகவும், அவை காகம் கொத்தி இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

பாதுகாக்க வேண்டும்

தொடர்ந்து, 1100 ஆமைக்குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டனர். இருப்பினும் வனத்துறையினர் இந்த ஆமை குஞ்சுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை மாவட்ட நிர்வாகமும் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com