

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பட்டாசு கடையில் புதுமையான முயற்சியாக ரோபோ மூலம் விற்பனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தூத்துக்குடி மாநகர பகுதியில் பட்டாசு விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. வாடிக்கையாளர்களை கவருவதற்காக விற்பனையாளர்கள் பல்வேறு புதிய யுத்திகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி பகுதியில் உள்ள ஒரு கடையில் கிலோ கணக்கில் வெடிகள் விற்பனை நடக்கிறது.
மேலும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக பட்டாசு விற்பனையில் புதுமையான முயற்சியாக ரோபோ மூலம் விற்பனை செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கடைக்கு வரும் சிறுவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ரோபோ மூலம் பட்டாசு விற்பனை செய்வது வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த ரோபோ கூடையுடன், வாடிக்கையாளர் பின்னால் செல்கிறது. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பட்டாசுகளை அந்த கூடையில் வைக்கின்றனர். அந்த கூடையில் ஒருகிலோ பட்டாசு வந்த உடன், அதனை வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறது.
அதன் பிறகு மற்றொரு கூடையை மாற்றி பட்டாசுகளை வாங்குகின்றனர். பின்னர் மொத்தமாக பில் போடும் இடத்துக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் உற்சாகமாக கடையில் பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.