மிக நீளமான சரக்கு கப்பலை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வரலாற்று சாதனை

மிக நீளமான சரக்கு கப்பலை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் அதிகபட்ச மிதவை ஆழம் 14.20 மீட்டராக உயர்த்துதல், துறைமுக கப்பல் சுற்றுவட்ட பாதையை 488 மீட்டரில் இருந்து 550 மீட்டராக விரிவுபடுத்துதல், துறைமுகத்துக்குள் நேரடி நுழைவு சேவை போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து 60 டன் திறன் கொண்ட இழுவைகப்பல் சமீபத்தில் வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த நிலையில் பனாமா நாட்டில் உள்ள கொலோன் துறைமுகத்தில் இருந்து மைக்கேலா என்ற சரக்கு பெட்டக கப்பல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. இந்த கப்பல் 304 மீட்டர் நீளமும், 40 மீட்டம் அகலமும் கொண்டது. 6 ஆயிரத்து 724 சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்ட கப்பல் ஆகும். இந்த கப்பலில் வந்த 3 ஆயிரத்து 977 சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 676 பெட்டகங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
1,104 சரக்கு பெட்டகங்கள் ஏற்றுமதிக்கும், 148 சரக்கு பெட்டகங்கள் மறுசீரமைப்பு செய்யவும், 49 சரக்கு பெட்டகங்கள் சரக்குபரிமாற்றத்துக்கும் கையாளப்பட்டன. இந்த மிகநீளமான சரக்கு கப்பலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள தக்சின் பாரத்கேட்வே சரக்கு பெட்டக முனையத்தில் வெற்றிகரமாக கையாண்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு 299.50 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் கையாளப்பட்டு இருந்தது. இதன் மூலம் வ.உ.சி. துறைமுகம் புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் கூறுகையில் , நடப்பு நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை துறைமுகம் 5 லட்சத்து 62 ஆயிரத்து 928 சரக்கு பெட்டகங்களை கையாண்டு உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 5 லட்சத்து 20 ஆயிரத்து 919 சரக்கு பெட்டகங்களை விட 8.06 சதவீதம் அதிகரித்து உள்ளது. துறைமுகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாடு காரணமாக பெரிய கப்பல்கள் கையாளப்படுகிறது. வெளித் துறைமுக திட்டம் தென் இந்தியாவுக்கான முக்கிய கடல் வர்த்தக நுழைவாயிலாக வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தை வலுப்படுத்தும் என்று கூறினார்.






