

தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2026-2027-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான கால கட்டத்தில் 3 ஆயிரம் காற்றாலை இறக்கைகளை கையாண்டு உள்ளது. இது 2025- 2026-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 2,300 காற்றாலை இறக்கைகளுடன் ஒப்பிடுகையில் 30.43 சதவீத வளர்ச்சியாகும்.
காற்றாலை இறக்கைகளை ஏற்றி வந்த கப்பல்களின் எண்ணிக்கையும் 64-ல் இருந்து 70 ஆக அதிகரித்து உள்ளது. 2026-2027-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், காற்றாலை இறக்கைகள் மொத்த சரக்கு போக்குவரத்தில் ஏற்றுமதி 59 சதவீதமாகவும், இறக்குமதி 41 சதவீதமாகவும் இருந்தது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட காற்றாலை இறக்கைகள் சீனா, ஜெர்மனி, ஸ்பெயின், டிரினிடாட், டொபாகோ, தென் கொரியா உள்ளிட்ட நாடுக ளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட காற்றாலை இறக்கைகள் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்காக கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த 3 நிதியாண்டுகளாக காற்றாலை இறக்கைகளைக் கையாள்வதில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. துறைமுகத்தில் சுங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே 1 லட்சம் சதுர மீட்டர் ' பரப்பளவில் பிரத்யேக திறந்தவெளி காற்றாலை இறக்கை சேமிப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஏற்கனவே 1.44 லட்சம் சதுர மீட்டராக இருந்த சேமிப்பு இடம் 1.50 லட்சம் சதுர மீட்டராக விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
துறைமுகத்தின் 5, 6 மற்றும் 7-ம் சரக்கு தளங்களில் மொத்தம் 1 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் தளம் அமைக்கப்பட்டு இடவசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தின் சாலை வசதிகள், போக்குவரத்து நெரிசலின்றி காற்றாலை இறக்கைகளை உற்பத்தி மையங்களில் இருந்து துறைமுகத்துக்கு கொண்டு வர உதவுகின்றன.
திறமையான பணியாளர்கள் அவற்றை பாதுகாப்பாக கையாளுவதுடன், கப்பல்களில் விரைவாகவும் திறம்பட ஏற்றுவதையும் உறுதி செய்கின்றனர். பிரத்யேக சேமிப்பு வசதிகள், நகரும் பளுதூக்கி எந்திரங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பணி யாளர்கள் மூலம் பெரிய அளவிலான காற்றாலை உதிரிப்பா கங்களைத் திறம்படக் கையாள முடிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.