

நெல்லை,
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல், தமிழ்நாடு கடற்கரைப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழக கடலோர, டெல்டா மாவட்டங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால் கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (22.10.2026) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.