

புதுடெல்லி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தையே ஒதுக்க வேண்டும் மேலும் அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை வழங்க உத்தரவிட கோரி டெல்லி ஐகோர்ட்டில் தினகரன் அணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் தேர்தல் ஆணையத்தை பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
டெல்லி ஐகோர்ட்டில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது. தினகரன் அணிக்கு கட்சி பெயரை வழங்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது.
உள்ளாட்சி தேர்தலை, மாநில தேர்தல் ஆணையம் நடத்துவதால் தங்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே தினகரன் அணியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் என கூறி இருந்தது.
உள்ளாட்சி தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட முடியாது என்பதால், பொதுவாக குக்கர் சின்னத்தை கேட்டுள்ளோம் என்று இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்டில் தினகரன் பதில் மனு தாக்கல் செய்தார். உள்ளாட்சி தேர்தலில் பிளவுபட்ட அமைப்புகளுக்கு தனிப்பட்ட பொது சின்னம் வழங்க சட்டம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அனைத்திந்தியா அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் அம்மா முன்னேற்ற கழகம், அம்மா எம்.ஜிஆர் முன்னேற்ற கழகம் என மூன்று பெயர்களை டிடிவி தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் பரிந்துரைத்து உள்ளார். இந்த பெயரகளில் ஏதாவது ஒன்றை தங்கள் அணிக்கு வழங்குமாறு கேட்டு கொண்டார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது தினகரனுக்கு குக்கர் சின்னம் மற்றும் அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.