த.வெ.க. 3-வது மாநில மாநாடு: முதற்கட்ட பணிகள் தொடக்கம் - திருச்சியா..? நெல்லையா..?

இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளநிலையில், மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்த த.வெ.க. திட்டமிட்டுள்ளது.
த.வெ.க. 3-வது மாநில மாநாடு: முதற்கட்ட பணிகள் தொடக்கம் - திருச்சியா..? நெல்லையா..?
Published on: 

சென்னை,

த.வெ.க. 3-வது மாநில மாநாட்டை திருச்சி அல்லது நெல்லையில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

த.வெ.க.

தமிழ் திரையுலகில் உச்ச நடிகரான விஜய் கடந்த 2024-ம் ஆண்டு த.வெ.க. என்ற கட்சியை தொடங்கினார். அதே ஆண்டில் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி தமிழகத்தின் ஒட்டு மொத்த பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார். லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடிய அந்த மாநாடு இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறி போனது.

முதல்-அமைச்சராக விஜய்

தொடர்ந்து மதுரையில் 2-வது மாநாட்டை நடத்தினார். கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் தமிழக சட்டசபை பொதுத்தேர்தலையும் சந்தித்த விஜய், மகத்தான வெற்றியை அரசியல் அரங்கில் பதிவு செய்தார். த.வெ.க. ஆட்சியை பிடித்தது. தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார்.

திருச்சி அல்லது நெல்லை

சமீபத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்று, மக்கள் தங்கள் பக்கம் என்பதை நிரூபித்துக் காட்டியது. இந்தநிலையில், கட்சியின் 3-வது மாநாட்டை, வெற்றி மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. த.வெ.க.வின் 3-வது ஆண்டு தொடக்கம், தேர்தல் வெற்றி, முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டை திருச்சி அல்லது நெல்லையில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 3-வது மாநாடு நடக்க இருப்பதாகவும், இந்த மாநாட்டுக்கு 'வெற்றி மாநாடு' என்று பெயர் சூட்டப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாணவர்களுக்கு பரிசுகள்

கடந்த சில ஆண்டுகளாக த.வெ.க. சார்பிலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பரிசளிப்பு விழா விரைவில் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் மாவட்ட செயலாளர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com