திருப்பத்தூர் தொகுதியில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற தவெக வேட்பாளர்... திமுக அமைச்சர் அதிர்ச்சி

பெரியகருப்பனுக்கும், த.வெ.க. வேட்பாளருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
திருப்பத்தூர் தொகுதியில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற தவெக வேட்பாளர்... திமுக அமைச்சர் அதிர்ச்சி
Published on

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தி.மு.க. சார்பில் பெரியகருப் பன் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பெரியகருப்பன் வெற்றி பெற்று அமைச்சர் ஆனார். மீண்டும் இந்த தேர்தலில் தி.மு.க. வேட் பாளராக அவரே களம் இறங்கினார்.

இத்தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜனதா வேட்பாளராக தென் னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன், நாம் தமிழர் வேட்பாளராக ரம்யா மோகன், த.வெ.க. வேட்பாளராக சீனிவாச சேதுபதி ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பனுக்கும், த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கடும் இழுபறி நீடித்தது.

இந்நிலையில் கடைசி 4 வாக்குப்பதிவு எந்திரங்களை எண்ணியபோது உச்சக்கட்ட பரபரப்பு இருந்தது. அதில் முதல் பெட்டியை எண்ணி முடித்தபோது பெரியகருப்பன் 127 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். மற்றொரு பெட்டியை எண்ணும்போது த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி 157 வாக்குகள் முன்னிலை பெற்றார். 3-வது பெட்டியை எண்ணும் போது அமைச்சர் பெரியகருப்பன் 30 வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.

கடைசி பெட்டியை எண்ணும் போது அந்த எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் அமைச்சர் பெரியகருப்பன் 83,374 வாக்குகளும், த.வெ.க.வேட்பாளர் 83,375 வாக்குகளும் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பெரிய கருப்பனைவிட த.வெ.க. வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை ஏற்க தி.மு..வினர் மறுத்து வாக்குவாதம் செய்தனர். மீண்டும் எண்ண வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. இதனால் வெற்றி அறிவிப்பு மதில் மேல் பூனையாக இருந்ததால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் ஒரே ஒரு வாக்கில் தோல்வியடைந்ததால் பெரியகருப்பன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com