

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்புகளை வெளியிட தீவிரம் காட்டி வருகிறது.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. முதல் கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க. இன்னும் சில நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில், சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் த.வெ.க., வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது.
234 தொகுதிகளுக்கும் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்கள். இந்த பட்டியலில் 30-க்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்களும் இடம் பெற இருக்கிறார்கள். இதற்கான நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டி யிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார்.
நாளை (சனிக்கிழமை) பெரம்பூர் தொகுதியில் இருந்து விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எம்.கே.பி. நக ரில் விஜய் காலை 11 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 5 இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விரிவான பயண திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இன்றி பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முறையாக தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அனுமதி கோரியுள்ளது. போலீஸ் தரப்பிலும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிர்வாகிகளு டன் விஜய் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் பொதுச்செயலா ளர் புஸ்சி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்தும், பெரம்பூரில் தொடங்கப் படும் பிரசார பயணம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
வேட்பாளர்களாக அறிவிக்கப்படுபவர்கள் தங்கள் வேட்புமனுவை பிழையின்றி நிரப்ப வேண்டும் என்றும், எந்த காரணத்தையும் கொண்டும் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும் நிலைக்கு சென்று விடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.