

கரூர்,
கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும். அமைப்பு செயலாளருமான சின்னசாமி, கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், ஜெயலலிதா பேரவை செயலாளரும். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையாவிட்டாலும், 2 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அப்படியே உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை அழிப்போம் என வந்த தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்டவை ஓய்ந்து போயுள்ளன. இதேபோலத்தான் த.வெ.க.வால் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. பதவி ஆசையால் வந்தவர்களை வைத்து அ.தி.மு.க.வின் தொண்டர்களை முதல்-அமைச்சர் விஜய் மதிப்பிட்டால் நிச்சயம் ஏமாந்து போவார். தலைமை செயலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டனர். வருகிற கரூர் இடைத்தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க. வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும், என்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்று தான் இருப்பதாக விஜய் குறிப்பிடுகிறார். தமிழக மக்கள் ஒரு தோல்வியை மட்டும் த.வெ.க.வுக்கு பரிசாக அளித்தால், அதன்பின்னர் த.வெ.க.வின் நிலைப்பு திறன் கேள்விக்குறியாகி விடும். அவர்களிடம் போராட்ட குணம் இருக்காது, என்றார்.