

விழுப்புரம்,
தமிழக வெற்றிக் கழகம் என்ற தனிக்கட்சி தொடங்கிய நடிகர் விஜய், இந்த தேர்தலைதான் முதன் முறையாக சந்தித்தார். தனித்து போட்டியிட்ட அவர், முதல் தேர்தலிலேயே, நாடே வியக்கும் வகையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
அவர், தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் முழுவதும் சென்ற மொத்த இடமே 17 இடங்கள்தான். ஒரு சில இடங்களில் பிர சாரத்திற்கு அவருக்கு போலீஸ் அனுமதி வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி ஒரு சில நேரங்களில் பிரசாரங்கள், கட்சி ரீதியாகவும் ரத்து செய்யப்பட்டது. இருந்தபோதிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் அலை வீசி இரு மாபெரும் திராவிட கட்சிகளையே ஆட்டம் காண வைத்துவிட்டது.
த.வெ.க. தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் இன்னும் பல இடங்களுக்கு நேரடியாக தேர்தல் பிரசாரத்திற்கு சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்திருந்தால் மேலும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்று யாருடைய தயவும் இன்றி தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பார் என்று அக்கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் பாவலாக பேசி வருகின்றனர்.
இதனை சற்று உண்மையாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போயுள்ளது. அந்த வரிசையில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்று. நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கி கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தியது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி.சாலையில்தான். ஆனால் இம்மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 4 தொகுதிகளிலும், தி.மு.க. கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் கூட தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெறவில்லை.
அதேநேரத்தில் விக்கிரவாண்டி, விழுப்புரம், மயிலம், வானூர், திருக்கோவிலூர் ஆகிய 5 தொகுதிகளில் த.வெ.க. 2-ம் இடத்தையும், செஞ்சி, திண்டிவனம் ஆகிய 2 தொகுதிகளில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்கள், மயிலம் தொகுதியை தவிர மற்ற 6 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இறுதி சுற்று வரை கடுமையான போட்டியை கொடுத்தனர். ஒரு சில தொகுதிகளில் அவர்கள் முன்னிலை பெற்று தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு நெருக்கடியும் ஏற்படுத்தினர்.
மாவட்டத்தில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 149 வாக்குகள் (30.57 சதவீதம்) பெற்றும் ஒரு தொகுதியில் கூட த.வெ.க. வெற்றி பெற முடியவில்லை. இது அக்கட்சியின் வேட்பாளர்களுக்கும், நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், விழுப்புரம் மாவட்டத் திற்கு த.வெ.க. தலைவர் விஜய், தேர்தல் பிரசாரம் செய்ய வராததுதான் என்று அக்கட்சியினர் சற்று ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர்.