

மதுரை,
மதுரையில் சில வாரங்களுக்கு முன்பு த.வெ.க. மகளிர் அணி அமைப்பாளர் சர்மிளா, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர், அக்கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி மீது பல்வேறு புகார்களை கூறி இருந்தார்.
அதில் "தமிழக வெற்றிக் கழகத்தில் தங்கப்பாண்டி சாதி பார்த்து பதவி வழங்குகிறார். வசதியான பெண்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வழங்கி உள்ளார். கடன் பிரச்சினைகளை தீர்க்க தங்கப்பாண்டி பெண் நிர்வாகிகளிடம் பணம் வாங்கினார். என்னுடைய நகைகளை அடகு வைத்து தங்கப்பாண்டிக்கு பணம் கொடுத்துள்ளேன். வட்டி கட்ட முடியாமல் நகைகளை விற்று விட்டேன், ஒரு காலகட்டத்தில் முடியாமல் தற்கொலைக்கு முயற்சித்தேன், தங்கப்பாண்டியிடம் தயவு செய்து என்னுடைய பணத்தை பெற்றுத் தாருங்கள். தங்கப்பாண்டி மீது புகார் தெரிவித்து இருப்பதால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்" என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சர்மிளாவின் கணவரும் த.வெ.க. தகவல் தொழில்நுட்பபிரிவு அமைப்பாளராக இருந்த பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
த.வெ.க. தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி, எங்களிடம் கட்சி வளர்ச்சி நிதி, நலத்திட்ட நிகழ்ச்சி நடத்துவதற்கு நிதி என பலமுறை ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். மேலும் பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் முதலீடு செய்யும்படி கூறினார். அதனால் நிலத்தை அடமானம் வைத்து ரூ.16 லட்சம் கொடுத்தோம். அதில் கிடைக்கும் லாபத்தை கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். ஆனால் தற்போது வரை எந்தவித லாப தொகையும் வழங்காததால் இந்த பண மோசடி குறித்து பலமுறை கட்சி மேலிடத்திற்கு தெரிவித்தோம்.
தேர்தல் முடிந்து த.வெ.க. ஆட்சி தமிழகத்தில் அமைந்ததும் ரூ.50 லட்சத்துக்கு வட்டி லாபத்துடன் ஒரு கோடியாக திருப்பி தருவதாக எங்களிடம் கூறியுள்ளனர். அதுவரை எந்தவித புகாரும் தெரிவிக்க வேண்டாம் என மாவட்ட தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கட்சியில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்களிடம் பணம் கொடுத்தால் மட்டுமே பதவி வழங்கப்படும் என பல்வேறு இடத்தில் ஊழலில் ஈடுபட்டு வருகிறார்கள். பதவிக்காக லட்சக்கணக்கில் மாவட்ட செயலாளர் பணத்தை வசூலித்து வருகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.