தற்கொலைக்கு முயன்ற த.வெ.க. பெண் நிர்வாகி; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ரூ.16 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக மதுரை மாவட்ட செயலாளர் மீது பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்கொலைக்கு முயன்ற த.வெ.க. பெண் நிர்வாகி;  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Published on

மதுரை,

மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சர்மிளா. இவர் தமிழக வெற்றிக்கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும், சுற்றுச்சூழல் அணி நிர்வாகியாகவும் பதவி வகித்து வருகிறார்.இந்த நிலையில், அவர் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் சர்மிளா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“த.வெ.க.வில் வசதியானவர்களை சேர்த்தால் தான் நானும் வளர முடியும், நீங்களும் வளர முடியும் என்று மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி கூறினார்.நான் சிலரை அழைத்து வந்தபோது, அவர்களிடம் பெரிய தொகை பணம் வாங்கி, என்னிடமும் பெரிய தொகை வாங்கினார். ‘காசு இல்லை’ என்று சொன்னபோது, ‘நகையை விற்றாவது காசு கொடுங்கள்’ என்று கேட்டார்.

மேலும், அவர் ஒரு ஐ.டி. நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தால் வட்டி தருவதாக கூறினார். அதை நம்பி, என் தாயாரின் நிலத்தை அடகு வைத்து ரூ.16 லட்சம் கொடுத்தேன்.இப்போது வரை எனக்கு வட்டி தரவில்லை. அதனால் மனஉளைச்சலில் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். இந்த நிமிடமே எனக்கு கிடைக்க வேண்டிய பணத்தை வாங்கிக் கொடுத்து விடுங்கள்,” என்று சர்மிளா வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com