

சென்னை,
த.வெ.க. வேட்பாளரை உருவக் கேலி செய்து பரப்புரை மேற்கொண்டதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் வழக்கறிஞர் அணி புகார் அளித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதி களுக்கு 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. 2 தொகுதிகளிலும் தலைவர்கள் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
இந்த சூழலில் முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று ஒரே நாளில் 'ரோடு ஷோ' மூலம் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனர்.
இதனிடையே தாராபுரம் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து, தாராபுரத்தில் நடந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்தத் தொகுதி த.வெ.க. வேட்பாளரை பெட்டி பாமா, பல்டி பாமா என சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை மக்கள் அழைக்கின்றனர்” என பேசினார். மேலும், த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவின் உருவம் குறித்தும் பேசியிருந்தார். இதற்கு த.வெ.க. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. வேட்பாளரை உருவக் கேலி செய்து பரப்புரை மேற்கொண்டதாக தேர்தல் ஆணையத்திடமும், டி.ஜி.பி.யிடமும் த.வெ.க. வழக்கறிஞர் அணி புகார் அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.