

கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய கம்யூனிஸ்டு கட்சி. தொடங்கப்பட்டபோதே தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு 2 முறை தடை விதிக்கப்பட்டது. தற்போது 4-வது முறையும் தடை விதிக்கப்படுமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் செப்டம்பர் 1 பேரணியில் பங்கேற்பதற்காக பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரெயில்களை ரத்து செய்துள்ளனர். பேரணியை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரை கணக்கெடுக்க வேண்டும் என தாசில்தார் சுற்றறிக்கை அனுப்ப உள்ளார். அதற்கான நகல்கள் மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்தவுடன் தாசில்தார் இடமாற்றப்படுகிறார்.
இதுதொடர்பாக சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பின்பு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட் டையன் போகிற போக்கில் அந்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது என்கிறார். தமிழகத்தில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி நடக்கிறது. கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக குறி வைத்து மோடி செயல்படுகிறார். அதேபோல தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியும் அவ்வாறு செயல்படுகிறதா? என்கிற கேள்விக்கு முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.
குறுவை தொகுப்பு மற்றும் பயிர்க்காப்பீட்டு தொகையை உட னடியாக வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முற்றுகை போராட்டம் நடத்தும். தாய்மாமன் திட்டத்தில் தங்க மோதிரம் வழங்குவதற்கான அரசின் டெண்டரில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். தாய்மாமன் விஷயத்தில் மோசடி இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.