த.வெ.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்திற்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் வன்னி அரசு

தி.மு.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அமைச்சர் வன்னி அரசு
Published on

சென்னை

த.வெ.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்திற்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் வன்னி அரசு கூறினார்.

தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்கள் தொடங்கின. காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, அம்பேத்கர் அயலக உதவி திட்டத்தின் கீழ் நிதி வழங்கவில்லை என மலேசியாவில் பயின்று வரும் மாணவர் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு அமைச்சர் வன்னி அரசு பதில் அளித்து பேசினார்.

நிலுவை தொகை

அப்போது தி.மு.க. சார்பில் பேசிய எம்.எல்.ஏ. கோவி செழியன், மற்ற மாணவர்களுக்கு வந்து விட்டது. தனக்கு நிலுவை தொகை வரவில்லை என்றே மாணவர் குற்றம்சாட்டி உள்ளார். தி.மு.க. ஆட்சியில் நிதி தரப்பட்டதை தான் அமைச்சர் தேதி வாரியாக வாசித்தார். குற்றச்சாட்டுக்கு பதில் தரவில்லை என்றார்.

இதுபற்றி அமைச்சர் வன்னி அரசு பதிலளித்து பேசும்போது, இதுவரை மாணவரின் கல்வி நலனுக்காக ரூ.48.22 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் உதவித்தொகைக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் மாணவர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கு 10 மாதங்கள் கடந்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை.

3 மடங்கு உயர்வு

மாணவனுக்கு நிதி கொடுத்தது தி.மு.க. ஆட்சியில் என ஒத்துக்கொள்கிறேன். கடந்த ஆட்சியில் தான் மாணவனுக்கு நிதி வழங்கப்பட்டது என சரியாக குறிப்பிட்டு தான் பேசி உள்ளேன். நான் சமூக நீதித்துறை அமைச்சரான பின்னர் தான் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை 3 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் குறைந்த நபர்களுக்கு தான் தி.மு.க. வழங்கியது. நான் துறைக்கு வந்த பின் 3 மடங்கு உயர்ந்துள்ளது என்று கூறினார்.

ரூ.131 கோடி

தி.மு.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு. ஆனால், த.வெ.க. ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. த.வெ.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார் என அமைச்சர் வன்னி அரசு கூறினார். 10 மாதங்கள் ஆகியும் மாணவர் தனது ஆவணங்களை பதிவு செய்யவில்லை. உள்நோக்கத்துடனும், அரசியல் காரணங்களுக்காகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று கூறினார். மாணவருக்கு அரசு வழங்கி உள்ள நிதியை தேதி வாரியாக குறிப்பிட்டு வன்னி அரசு பதிலளித்து பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com