

சென்னை,
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16-ந்தேதி அன்பில் மகேசுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த முன்ஜாமீன் மனுவை இன்று காலையில் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏவுமான சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முன் ஜாமீன் மறுக்கப்பட்ட உடன், உடனடியாக கைது நடவடிக்கையில் இறங்குகிறார்கள். மீண்டும் அலைக்கழிக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு அழைத்துக்கொண்டு வருவது போல வந்து சுற்றி சுற்றி வந்து மீண்டும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்.
இந்த ஆட்சி நீதிமன்றத்தையும் மதிப்பது இல்லை. சட்டத்தையும் மதிப்பது இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. யாரையும் காவல்துறை அனுமதிக்கவில்லை. இந்த ஆட்சி எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என்று கூறியுள்ளார்.