

சென்னை,
விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட கோரியும் தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட த.வெ.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தி.நகர் அப்புனு தலைமைத் தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் பேசியதாவது:-
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக அடையாறில் கல்லூரி மாணவி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மக்களுக்காக ஆட்சி செய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் மக்கள் விரோத ஆட்சியை செய்து வருவது தமிழ்நாடு மக்களாகிய நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்று.
இருப்பினும் இந்த ஆட்சியில் நிகழும் அவலங்களை, மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை, நமது தலைவர் தமிழக வெற்றிக் கழகமும் தொடர்ந்து மக்களோடு மக்களாக நின்று, எதிர்த்து, ஜனநாயக குரலை தொடர்ந்து எழுப்பி வருகிறோம். விகிதாச்சார அடிப்படையில் அனைவருக்கும் அனைத்திலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் ' அவர்களின் கொள்கை முழக்கம்.
ஆனால் பெரியார் வழியில் ஆட்சி நடத்துகி றோம் என்று தம்பட்டம் அடிக்கும் இந்த திமுக அரசு, சாதிவாரி கணக்காய்வு நடத்தாமல், சமூக நீதிக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டி, எங்களது கடுமையான கண்டனத்தை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். தி.மு.க.வின் கூட்டணி கட்சி ஆளக்கூடிய மாநிலங்களில் கூட சாதிவாரி கணக்காய்வு நடத்தும் போது, இந்த திமுக அரசு மட்டும் அதை பற்றியெல்லாம் சிந்திக்காமல் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுவதையே முழு நேர வேலையாக செய்கிறது.
எனவே ஆளும் திமுக அரசு பெரியாரின் பேரன்கள் என போலி வேஷம் போடாமல், உடனடியாக சாதிவாரி கணக்காய்வு நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டு, அதனை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் தினசரி காலையில் எழுந்து செய்தித் தாள்களை படித்தால், எங்கு பார்த்தாலும் சர்வ சாதாரணமாக கொலை, கொள்ளை, 2 வயது பெண் குழந்தை முதல் வயதான பாட்டிகள் வரை பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் பல்வேறு பாலியல் வன்முறை குற்றங்கள் செய்பவர்கள் பாதி பேர் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சியை நடத்தும் ஆட்சியாளர்களை இனியும் மக்கள் நம்ப போவதில்லை.
தமிழ்நாட்டை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என சொல்லிவிட்டு இன்றைக்கு. போதைப் பொருள்கள் கிடைக்காத இடமே இல்லை என்ற நிலைக்கு மாநிலத்தை மாற்றியிருக்கிறது இந்த போதை மாடல் திமுக அரசு.மக்கள் அலை கடலென திரள்வதை கண்டு பயந்த நடுங்கிய ஆட்சியாளர்கள், எப்படியாவது த.வெ.க. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை முடக்க வேண்டும். என்ற காழ்ப்புணர்ச்சியில் ஒரு வழிகாட்டு நெறி முறைகள் வெளியிட்டு உள்ளனர்.
ஜனநாயக நாட்டில் ஒரு தலைவர் தனது மக்களை சந்திக்கவே முடியாத வகையில் தடுக்கும் இந்த ஜனநாயக விரோத வழி காட்டு நெறிமுறைகளை தி.மு.க. அரசு திரும்பப் பெற வேண்டும். 2026 தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில், உங்கள் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக எங்கள் தலைவர் விஜய்யின் மக்களாட்சி நிச்சயம் அமையும். எங்கள் தலைவரின் நல்லாட்சியில் சமூக நீதி பாதுகாக்கப்படும், பெண்களின் பாதுகாப்பு 100 சதவீத உறுதி செய்யப்படும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு பாதுகாப்பான ஆட்சி வழங்கப்படும்.
இன்னும் 50 நாட்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமையும், விசில் சத்தம் மகிழ்ச்சிப் பேரொளியாகதமிழ்நாடு முழுக்க ஒலிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.