

கோவை,
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நூலகத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் அறிவுலகம் என்று பெயர் சூட்டினார். அப்போது பணிகள் நிறைவு பெறாததால் நூலகம் திறக்கப்படவில்லை. இதனையடுத்து பணிகள் முடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-அமைச்சர் விஜய் இந்த அறிவுலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிலையில் கோவையில் கட்டப்பட்ட பிரமாண்ட நூலகத்துக்கு பெரியார் பெயர் வைத்ததற்காக திராவிடர் கழகம் சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை வருகை தந்த மு.க.ஸ்டாலின், திராவிட கழகத்தின் தலைவர் வீரமணியுடன் சேர்ந்து பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-
“கோவையின் புதிய அடையாளமாக பெரியார் அறிவுலகம் கம்பீரமாக நிற்கிறது. பெரியார் அறிவுலகத்தை கோவையின் அடையாளமாக மட்டுமின்றி தமிழகத்தின் அடையாளமாக திராவிட மாடல் ஆட்சியில் அமைத்தோம். கடந்த 5 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளை திராவிட மாடல் ஆட்சியில் நான் செய்திருக்கலாம். ஆனால் என்னால் மறக்க முடியாத சாதனையாக அமைந்ததுதான் பெரியார் அறிவுலகம். இந்த அறிவுலகத்தின் 99 சதவீத பணிகள் நிறைவடைந்த சமயத்தில்தான் தேர்தல் நடைபெற்றது.
நெல்லையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பெயரிலும், கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரிலும், சேலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலும் நவீன நூலகங்களை அமைக்க திட்டமிட்டோம். தி.மு.க. ஆட்சியில் முடிவான திட்டங்கள் என்ற காரணத்தால் இந்த ஆட்சியில் சொல்லப்படாமல் பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. நெல்லை, கடலூர், சேலம் நூலகங்களுக்கு அந்த நிலை வந்துவிடாமல் சீக்கிரமாக பணிகளை முடித்து திறந்து வைக்க வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அரசை எப்போது பார்த்தாலும் இப்படி விமர்சனம் செய்கிறீர்களே? என்று ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் சிலர் கேட்கிறார்கள். ஆட்சியின் லட்சணம் இப்படி இருந்தால் நான் என்ன செய்ய முடியும்? நான் மட்டுமே விமர்சிக்கிறேன்? எல்லா தலைவர்களும் விமர்சிக்கிறார்கள். மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சொதப்பல் அரசு அடிக்கும் கூத்துகளை பார்த்துவிட்டு யார்தான் விமர்சனம் செய்யாமல் இருக்க முடியும்?
முதல்-அமைச்சர் என்ன உடை அணிய வேண்டும், அவரது அலுவலகம் எங்கு இருக்க வேண்டும், அவர் என்ன பொட்டு வைக்க வேண்டும் என அனைத்தையும் இந்த ஆட்சியில் ஜோசியர்தான் முடிவு செய்கிறார். எனது ஆட்சியில் பவர் சென்டரே இருக்காது என்று பதவியேற்பு விழாவில் முதல்-அமைச்சர் விஜய் சொன்னார். ஆனால் தற்போது முதல்-அமைச்சரின் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் பவர் சென்டர்கள்தான் ஆட்சியை நடத்துகிறார்கள்.
யாரெல்லாம் இந்த ஆட்சி வரவேண்டும் என்று வாக்களித்தார்களோ, அவர்களெல்லாம் இப்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். மின்வெட்டு பிரச்சினையை இவர்களால் சரிசெய்ய முடியவில்லை. கொலையும், கொள்ளையும் த.வெ.க. ஆட்சியில் தொடர்ந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள். பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
த.வெ.க. ஆட்சி நீடிப்பது தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல. இயற்கை பேரிடர் வந்தால் மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவது போல், தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை நிலவுகிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.