

காரைக்குடி,
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தேவர் சிலை முன்பு மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை பிரசாரம் செய்ய உள்ளார்.
இன்று காலை மதுரை விமான நிலையத்தில் இருந்து வரும் விஜய் மேலூர், திருப்பத்தூர் வழியாக காலை 11.30 மணிக்கு காரைக்குடி வருகிறார். பின்னர் காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து வ.உ.சி. சாலை, கழனிவாசல், வாட்டர் டேங்க் வழியாக தேவர் சிலை வரை நகர்வலமாக திறந்த வேனில் சென்று ஆதரவு திரட்டுகிறார். பின்னர் மதியம் 12 மணிக்கு மேல் தேவர் சிலை முன்பு திறந்த வேனில் நின்று பேசுகிறார்.
இந்த பிரசாரத்திற்கு 37 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்து உள்ளனர். அதில் முக்கியமாக இன்று மதியம் 12.30 மணியில் இருந்து 2 மணிக்குள் பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றும், விஜய் எந்த பாதையின் வழியாக வருகிறாரோ அதே பாதையில் திரும்பி செல்ல வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
விஜய் வருகையையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் தேவர் சிலை அருகே உள்ள மரங்கள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் மீது ஏறி நிற்பதை தடுக்கும் வகையில் அவற்றை சுற்றி இரும்பு தகரங்களை கொண்டு அடைத்துள்ளனர். காரைக்குடி போக்குவரத்து போலீசார் சார்பில் மதுரை, திண் டுக்கல், திருப்பத்தூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.