

சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதில் 4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 885 வாக்குகள் ஈ.வி.எம். எந்திரம் மூலமாகவும், தபால் வாக்குகளாக 5 லட்சத்து 80 ஆயிரத்து 384-ம் பதிவாகி இருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 109 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்நிலையில், போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றி பெற்றுள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் 88,744 வாக்குகளைப் பெற்று, 38,927 வாக்குகள் முன்னிலையுடன் வெற்றியை உறுதி செய்துள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் 49,817 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் திலகபாமா 6,830 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.
அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் 62,057 வாக்குகளைப் பெற்று 20,394 வாக்குகள் முன்னிலையுடன் வெற்றியை உறுதி செய்துள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் 41,663 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ராஜசேகரன் 14,159 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.
பொதுவாக, ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். இந்நிலையில் விஜய், தான் வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் எதை விட்டுக்கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு, அவரது கட்சி தொண்டர்களையும் தாண்டி, தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.