நீட் தேர்வு குறித்த த.வெ.க. தலைவர் விஜய் கருத்து - புதிய தமிழகம் கட்சி ஆதரவு


நீட் தேர்வு குறித்த த.வெ.க. தலைவர் விஜய் கருத்து - புதிய தமிழகம் கட்சி ஆதரவு
x

விஜயின் நீட் தேர்வு குரலுக்கு, புதிய தமிழகம் கட்சி என்றென்றும் துணை நிற்கும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நேற்று கூறிய கருத்துக்குப் பிறகு. நீட் தேர்வு மீண்டும் விவாத பொருளாக்கப்பட்டு இருக்கிறது. விஜய் நீட் தேர்வு குறித்து சரியான கருத்தையே கூறி இருக்கிறார். தவறான கருத்தை எதையும் கூறவில்லை. ஆண்டொன்றுக்கு தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் என நான்கு துறைகள் முன்னிலை வகிக்கின்றன.

இன்றைய நவீன உலகில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன. தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெறும் 10 லட்சம் மாணவர்களால் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 10,000 மருத்துவ இடங்களில் அனைவரும் வாய்ப்பை பெற இயலாது என்பது எதார்த்தம்.

எனவே மாணவச் செல்வங்கள் தங்களின் திறமைக்கு ஏற்ப ஒவ்வொரு துறையிலும் முன்னேறி செல்ல வழி காட்ட வேண்டியது ஒவ்வொரு சமூக பற்றாளர்களின் கடமையாக இருக்க வேண்டும். அதை விட்டு நீட்டை ஒழிப்பது என மாணவர்களுக்கு தவறான வழிகாட்டுதலை எவர் செய்தாலும் அவர்கள் தமிழ் மக்களுக்கு. தமிழகத்திற்கு துரோகம் செய்தவர்கள் எனக் கருத வேண்டும்.

அந்த வகையில் நீட் தேர்வு குறித்த த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் கருத்துக்கு எனது வாழ்த்துக்கள்! தொடர்ந்து தமிழக மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் உண்மையை உரக்கச் சொல்லி வர வேண்டும்! விஜய் அவர்களின் நீட் தேர்வு குறித்த குரலுக்கு புதிய தமிழகம் கட்சி என்றென்றும் துணை நிற்கும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசும்போது, "நீட் தேர்வு மட்டும்தான் உலகமா. நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப பெரியது. அதில், மாணவர்கள் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. அதனால் இப்போதே உங்கள் மனதை பலமாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி இருந்தார்.

1 More update

Next Story