முதல்-அமைச்சர் குறித்த த.வெ.க. தலைவர் விஜய்யின் பேச்சு - துரை வைகோ கருத்து


முதல்-அமைச்சர் குறித்த த.வெ.க. தலைவர் விஜய்யின் பேச்சு - துரை வைகோ கருத்து
x

ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் கட்சியை போல் நடந்து கொண்டுள்ளது என துரை வைகோ தெரிவித்தார்.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ம.தி.மு.க. தென் மண்டல மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என கூறி சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல காரணங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது பலத்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

தேர்தல் ஆணையத்தை பொருத்தவரை ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஒரு அரசியல் கட்சியை போல் நடந்து கொண்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசிடம் கேட்டோம். அந்த விவாதத்துக்கு அவர்கள் மறுத்து விட்டனர். தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தான் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அங்கு பேரணி நடந்து வருகிறது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் கணிசமானவற்றை நிறைவேற்றியுள்ளனர். சில வாக்குறுதிகளுக்கு முதல்-அமைச்சரும் துறை சார்ந்த அமைச்சரும் பதில் அளித்துள்ளனர். பல வாக்குறுதிகள் நிறைவேறாமல் இருப்பதற்கு நிதி நெருக்கடியும் ஒரு காரணம். இது போன்ற நிலை பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் நிலவுகிறது.

கட்டாய கல்வி திட்டத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை. இதுபோன்ற சூழலில் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றால் அதனை மாநில அரசு செய்ய வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. நிதி நெருக்கடி உள்ள நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கூட்டணி கட்சியினர் சொல்லி உள்ளனர்.

துணை ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை இண்டியா கூட்டணி மட்டுமல்லாது கூட்டணியில் இல்லாத திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கொள்கை ரீதியான போராட்டமாக தான் இதை பார்க்கிறோம். முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டி எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழராக இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கோட்பாடு படி பா.ஜ.க. வேட்பாளராக தான் பார்க்கிறோம்.

மக்களும் அப்படித்தான் பார்க்கின்றனர். மதவாத கோட்பாட்டின் அடிப்படையிலான வேட்பாளரா அல்லது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிற வேட்பாளரா என்பதை எம்.பி.க்கள் முடிவு செய்ய வேண்டும்.

சட்டப்பிரிவு 130-ன் படி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின்னர் அவர்களது பதவிகளை பறிப்பது ஆட்சேபனை கிடையாது. ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருக்கும் போது அவரது பதவியை பறிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒருவரின் பதவியை பறிப்பதற்காக அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் ஒரு மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவோ அல்லது கவர்னர் ஆட்சி அமல் படுத்துவதற்காக, ஒரு மாநிலத்தின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்வதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. எங்களுக்கு மட்டுமல்ல பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் சந்தேகமும் பயமும் உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியதை தவிர்த்திருக்க வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் ம.தி.மு.க. சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story