குற்றங்களை மூடி மறைக்கும் வழியையே த.வெ.க.வினர் தேடுகின்றனர்: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழகத்தில் நடைபெறும் பாலியல் குற்றங்களில் பல சம்பவங்களில் ஆளுங்கட்சியினரே தொடர்புடையவர்களாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
கனிமொழி எம்.பி.
Published on

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. பதிலளித்து பேசியதாவது:

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது என்று பொய்யான பிரச்சாரத்தை முன்னிறுத்தியே த.வெ.க. ஆட்சிக்கு வந்துள்ளார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மிக முக்கியமாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி, அரசு எந்தக் கவலையும் அக்கறையும் இல்லாத அளவுக்குத் தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட மோசமாக, அந்தக் குற்றத்தை எப்படி மூடி மறைப்பது என்பதற்கான வழிகளைத்தான் இன்று அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று, ஒரு குழந்தையின் பிரேதப் பரிசோதனை (ஆட்டோப்சி) நடைபெறும் இடத்திற்கே ஒரு எம்.எல்.ஏ. உள்ளே சென்று, அந்தக் குழந்தையின் பெற்றோருடன் பேரம் பேசும் அளவுக்கு மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுடைய மகளிரணியைச் சேர்ந்த சகோதரி ஒருவர் அந்த நிகழ்வை நேரில் பார்த்திருக்கிறார். எனவே, இப்படிப்பட்ட ஒரு மிக மோசமான சூழலில்தான் தமிழ்நாட்டை கொண்டுபோய் அவர்கள் தள்ளியிருக்கிறார்கள்.

சிங்கப்பெண் படைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

சிங்கப்பெண் அமைக்கப்பட்ட பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? என்ற கேள்விக்கு, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. 'சிங்கப்பெண்' படை என்று பெயர் மாற்றம் செய்து வழங்கியதைப் பற்றி கூட நாங்கள் பெரிதாகப் பேச விரும்பவில்லை. ஆனால், அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அவங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு தொலைபேசி எண் கூடக் கிடையாது.

ஏதேனும் ஒரு குற்றச் சம்பவமோ அல்லது பிரச்சினையோ ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக மகளிர் ரோந்து வாகனத்தைத் தொடர்புகொள்வதற்கான வழிவகை கூட இல்லை. இவ்வாறான சூழலில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இப்படி ஒரு சூழலில், முதல்-அமைச்சர் இதுவரைக்கும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட இதைப் பற்றி பேசுவத்திற்கு தயாராக இல்லை. அப்படியிருக்கும்போது, மக்கள் மீதும், பெண்கள் மீதும், குழந்தைகள் மீதும் இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகிறது. மேலும், முதல்-அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் காவல்துறையைப் பற்றிக் கூட அவர் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பாலியல் குற்றங்களில் ஆளுங்கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "பல சம்பவங்களில் ஆளுங்கட்சியினரே தொடர்புடையவர்களாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. தனி மனித ஒழுக்கம் மற்றும் போதைப்பொருள் குறித்து அவர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். ஆனால், ஆட்சியாளர்கள் தங்களுடைய அடிப்படைக் கடமைகளிலிருந்தே தவறி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல், பெண்களின் உடையால்தான் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன என்ற கருத்துகளை அவருடைய திரைப்படங்களில் பேசியவர்தான் இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார். எனவே, பெண்கள் மீதே இந்தக் குற்றங்களை அவர்கள் திருப்புகிறார்களா என்று தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com