

சென்னை,
தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அரசியல் கட்சியினர் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?. முதல்-அமைச்சர் விஜய் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.