

சென்னை,
தமிழக சட்டசபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை இன்று நடத்துகிறது. அதன்படி இன்று (புதன்கிழமை) சட்டசபையில் அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் ஒருவர் முன்மொழிய, அதில் முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றுவார். எதிர்க்கட்சியினரும் இதில் உரையாற்றுவார்கள்.
அதன் பிறகு அந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படும். எதிர்க்கட்சியினர் யாராவது எண்ணிக் கணிக்கும் டிவிஷன் முறைப்படி வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று கேட்டால், அந்த வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட வேண்டும். அவைக்கு வெளியே எம்.எல்.ஏ.க்கள் சென்றிருந்தால் அவர்களை அவைக்குள் வரச் செய்வதற்கான மணி யோசை 3 முறை ஒலிக்கப்படும்.
அதன் பின்னர் அவையின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும். பின்னர் சட்டசபை செயலாளர், டிவிஷன் வாக்கெ டுப்பை நடத்துவார். ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள (மொத்தம் 6 டிவிஷன்) எம்.எல்.ஏ.க்களிடம் சட்டசபை செயலாளர், தீர்மானத்தை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும், நடுநிலை வகிப்போரையும் தனித்தனியாக எழுந்து நிற்கக் கூறுவார்.
அந்த வகையில், அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கையையும், எதிர்ப்போரின் எண்ணிக்கையும் கணக்கிட்டு சபாநாயகரிடம் செயலாளர் வழங்குவார். சட்டசபையில் வீற்றிருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் + 1 என்ற எண்ணிக்கையை தீர்மானம் பெற வேண்டும்.
அதன்படி வெற்றி, தோல்வியை சபாநாயகர் அறிவிப்பார். வெற்றி பெற்றுவிட்டால் அரசு தனது பணியை தொடர்ந்து நடத்தும். ஒருவேளை தீர்மானம் தோற்றுவிட்டால். அது கவர்னருக்கு தெரிவிக்கப்படும். பெரும்பான்மையை அரசு நிரூபிக்கத் தவறிவிட்டதால் அரசு கலைக்கப்படுவதாக கவர்னர் உத்தரவிடுவார். ஆனால் த.வெ.க. அரசு, இந்த தீர்மானத்தில் தோற்க வாய்ப்பு மிகமிக குறைவாக உள்ளது.
இந்த நிலையில், விஜய் தலைமையிலான தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் இருந்து சொகுசு பஸ்சில் தவெக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்தனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர பிற மாவட்டங்களைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ.க்கள் மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.