

கோவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மாநில மையக்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-எந்த தீயசக்தியை எதிர்த்து போராடுகிறோம் என்று சொன்னார்களோ, அந்த தீயசக்தியோடு இருந்தவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியினர் புறவாசல் வழியாக அமைச்சராகி இருக்கிறார்கள். காங்கிரஸ் பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சி. ஊழல் அதிகமாக செய்த கட்சி. மக்களுக்கு எந்த நலத்திட்டமும் செய்யாத கட்சி.எனவே மாற்றங்களை கொண்டு வருவோம் என கூறிய த.வெ.க., காங்கிரசை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி செய்வார்கள் என்பதை உற்று நோக்க வேண்டும். இளைஞர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு தேசபக்தி பாடலைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நாங்கள் இதைப் பின்பற்ற மாட்டோம் என்று தமிழக அமைச்சர்கள் பொத்தாம் பொதுவாகக் கருத்துச் சொல்ல முடியாது.மத்திய அரசு வழங்கும் வழிமுறைகள் அவர்களுக்கு சொந்தமானவை அல்ல. அவை நாட்டுக்கான வழிமுறைகள். எனவே அதை அவர்கள் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது சனாதனம், வந்தே மாதரம் ஆகியவற்றை வைத்து அரசியல் செய்தார்கள். இனிமேலும் தமிழகத்தில் அத்தகைய உணர்ச்சிப்பூர்வமான அரசியலை முன்னெடுக்காமல், ஆக்கப்பூர்வமான அரசியலை நோக்கிச் செல்ல வேண்டும். இந்த அரசியல் சூழ்ச்சியில் த.வெ.க. பலியாகிவிடக் கூடாது. குறிப்பாக, கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் தங்களின் தனித்தன்மைக்கு அழுத்தம் கொடுக்காதவாறு த.வெ.க விழிப்புடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.