

சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“புதுக்கோட்டையில் தூய்மைப் பணியாளர்களுக்காக நடைபெற்ற அரசு நல முகாமில் அமைச்சரின் சகோதரருக்கு என்ன வேலை? ஆளும் கட்சி என்பதால் அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பதும், அதனை ரீல்ஸாக வெளியிட்டு சிலாகித்துக்கொள்வதும் அப்பட்டமான அதிகார அத்துமீறல் ஆகும்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு நல முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததோடு, அதனை தனது ஆதரவாளர்களின் மூலம் பெருமிதமாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக வெளியிட்டிருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் சகோதரரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, அரசு நிர்வாகத்தின் தலைமையகமான தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறை தொடங்கி முதல்-அமைச்சரின் அறை வரை த.வெ.க.வினர் ரீல்ஸ் எடுக்கும் தளங்களாக மாறிவிட்ட நிலையில், தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட அரசு முகாமை தனது தனிப்பட்ட விளம்பரக் கூடமாக மாற்றிக் கொள்வதற்கு அனுமதியும் அதிகாரமும் கொடுத்தது யார்?
அம்மா உணவகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் அத்துமீறி நுழைந்து ஆய்வு எனும் பெயரில் ரீல்ஸ் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கும் த.வெ.க.வினரை கண்டிக்கத் தவறிய அக்கட்சியின் தலைமையால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை தமிழகத்தில் உருவாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அரசு நிர்வாகத்தில் த.வெ.க.வினரின் தலையீடு முற்றிவரும் நிலையில், அதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, ரீல்ஸ் மோகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ரியல் ஆட்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என த.வெ.க. அரசையும் முதல்-அமைச்சர் விஜய்யையும் வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.