

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பதை முடிவு செய்வதற்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானபோது யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தி.மு.க. கூட்டணி 73 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 53 இடங்களும் கிடைத்தன.
இவர்கள் இருவரையும் எதிர்த்து அரசியலில் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டார். இதன்படி, தி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ், 2 கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றிடம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆதரவு கேட்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு விஜய்க்கு உடனடியாக கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளும் விஜய்க்கு நேற்று ஆதரவு தெரிவித்தன. இதன் மூலம், 2 கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்தது.
தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும், விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் ஆட்சி அமைக்க முடியும். இதனால் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்களின் பலம் 107 ஆக குறையும். இந்த 107 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள், 2 கம்யூனிஸ்டுகள் சார்பில் 4 எம்.எல்.ஏ.க்கள் என 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் நேற்று விஜய் 3-வது முறையாக கவர்னர் அர்லேகரை சந்தித்து ஆதரவு கோரினார். இருப்பினும், இதுவரை விஜய்யை ஆட்சி அமைப்பதற்கு கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை.
இந்த நிலையில் விசிக ஆதரவு வழங்கியதால் எம்.எல்.ஏ. ஆதரவு எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி மீண்டும் கவர்னரை சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார்.கவர்னர் இன்று மாலை கேரளா செல்ல இருப்பதாக சொல்லப்படுவதால், அவர் நேரம் வழங்குவாரா அல்லது ஏதேனும் அதிரடி திருப்பம் ஏற்படுமா? என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.