

சென்னை,
த.வெ.க. ஆதரவு கட்சி தலைவர்களை, அமைச்சர்கள் நேற்று சந்தித்தனர். 9-ந் தேதி நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தல், தமிழ்நாட்டில் அரசியல் களத்தையே புரட்டி போட்டது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தி.மு.க.வுக்கு ஏமாற்றத்தையும், கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்த த.வெ.க.வுக்கு இன்ப அதிர்ச்சியையும், அ.தி.மு.க.வுக்கு சற்று பின்னடைவையும் இந்த தேர்தல் கொடுத்தது.
இதுமட்டுமா? தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியில் இருந்த கட்சிகள், தேர்தலுக்கு பிறகு இன்னொரு கூட்டணிக்கு தாவி பயணித்த நிகழ்வும் அரங்கேறின. அந்த வகையில் ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருக்க த.வெ.க.வுடன், தி.மு.க.வில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டின.
இதை தற்போது அமைந்திருக்கும் ஆட்சிக்கான கூட்டணியாக மட்டுமல்லாமல், அடுத்து வர இருக்கும் தேர்தல்களை சந்திக்க இருக்கும் அரசியல் கூட்டணியாகவும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி த.வெ.க. ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்தனர்.
சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்த இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முதல் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்கவில்லை.
அந்த கூட்டத்தில், கூட்டணிக்கு ஒரு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த சூழ்நிலையில் த.வெ.க. மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேற்று தங்கள் கூட்டணி கட்சி தலைவர்களையும், நிர்வாகிகளையும் நேரில் சந்தித்தனர்.
அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று மாநில செயலாளர்கள் வீரபாண்டியன் மற்றும் சண்முகத்தை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். அப்போது நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணாநகரில் உள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவையும் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளரை சந்தித்து விட்டு வெளியே வந்த அமைச்சர் நிர்மல்குமார், "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு " என்றும், வைகோவை சந்தித்துவிட்டு வெளியே வந்த போது, "முதல்-அமைச்சருக்கு உற்ற துணையாக இருக்கும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். 9-ந்தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் முதல்-அமைச்சரும் பங்கேற்கிறார்" என்றும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து "த.வெ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் சார்பில் எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவசியம் பங்கேற்போம்" என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 9-ந் தேதி நடைபெறும் த.வெ.க. ஆதரவு கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்த பெயர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
த.வெ.க. ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்காத நிலையில், 2-வது கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதா? என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் குழு நாளை (இன்று) கூடுகிறது. அதன் பிறகு எங்கள் நிர்வாக, செயல், மாநிலக்குழு கூட இருக்கிறது. முதல்-அமைச்சர் சொன்னதாக அமைச்சர்கள் கூறிய கருத்தையும் அதில் விவாதிப்போம். அப்போதுள்ள சூழலை பத்திரிகை, ஊடகத்தினருக்கு தெரிவிப்போம்.
இடதுசாரிகள் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளித்து த.வெ.க.வை ஆதரித்தோம். அதேபோல் மக்கள் அதிகாரத்தில் கவர்னர் அமர்ந்துவிடக்கூடாது என்பதற்காக த.வெ.க.வை வெளியில் இருந்து ஆதரித்தோம். கூட்டணி, அமைச்சரவையில் இல்லை. வெளியில் இருந்து ஆதரிப்பதால், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்காக சமரசம் இல்லாமல் குரல் எழுப்புகிறோம்.
அரசு நல்ல திட்டங்கள், அரசியல் திசையில் நகரும்போது ஆதரிப்போம். முதல் கூட்டம் விருந்து. கூட்டணி குறித்து அதில் பேசுவது உடன்பாடு அல்ல. நாங்கள் சென்றால் அந்த கூட்டணியில் பங்கேற்க இயலாது. விருந்தின் தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதால் முதல்-அமைச்சரிடம் அதுபற்றி தெரிவித்து பங்கேற்கவில்லை. இப்போது கூட்டணி தொடர்பான அழைப்பு வந்திருக்கிறது. அதுபற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது. கட்சிதான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.