

மதுரை,
மதுரையில் இருந்து தஞ்சாவூர், சிதம்பரம் வழியாக வாரம் இருமுறை மகால் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, ஏற்கனவே இயக்கப்பட்ட ரெயில்கள் தற்போது ஒவ்வொன்றாக இயக்கப்பட்டு வருகின்றன.
அதனை தொடர்ந்து, இந்த ரெயில் நேற்று முதல் இயக்கப்பட்டது. இந்த ரெயில் மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், சென்னையில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.06158) நேற்று இரவு 8.50 மணிக்கு மதுரை ரெயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டது. காலை 6.55 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், சென்னையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 8.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
இந்த ரெயில்கள், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும், இந்த ரெயில் தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டது. இதனால், மதுரை ரெயில்நிலையத்தில் இந்த ரெயிலின் பெட்டிகள் வண்ண காகிதங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.