நுங்கம்பாக்கம் மதுபான பார் வழக்கில் திருப்பம்:போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு அதிரடி கைது

சென்னை நுங்கம்பாக்கம் பாரில் நடந்த அடி-தடி மோதல் வழக்கில், முக்கிய திருப்பமாக, கோவை பயங்கரவாதிகள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டரும், மதுரை ஆயுதப்படை போலீஸ் ஏட்டுவும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நுங்கம்பாக்கம் மதுபான பார் வழக்கில் திருப்பம்:போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு அதிரடி கைது
Published on

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபாரில் நடந்த அடி-தடி மோதல் சம்பவம் தொடர்பான வழக்கில், திடுக்கிடும் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டின் மகன் செல்வபாரதி முதலில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது எதிர்தரப்பை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்களான அஜய் ரோகன், பிரசாத், நடிகர் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியை சேர்ந்த நாகேந்திர சேதுபதி ஆகியோர் கைதானார்கள். கைதான 4 பேர்களிடமும், தற்போது போலீஸ் காவலில் விசாரணை நடக்கிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தி.மு.க. பிரமுகரும், கிழக்கு கடற்கரை சாலையில் தூண்டில் என்ற ஓட்டலை நடத்தி வந்தவருமான தூண்டில் ராஜா என்பவர் மராட்டிய மாநிலம் புனேவில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் நேற்று காலை, சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம், தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க. பிரமுகர் பிரசாத் மீது மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. அரசு வேலை வாங்கி தருவதாக சேலத்தை சேர்ந்த குழந்தை வேலு என்பவரிடமும், அசோக்குமார் என்பவரிடமும் ரூ.16 லட்சம் வாங்கி அபகரித்ததாக அவர் மீதான வழக்கில் குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்த மோசடி வழக்கிலும், பிரசாத் கைது செய்யப்பட்டார். பிரசாத்தின் மோசடி லீலைகளுக்கு உறுதுணையாக செயல்பட்டதாக, கோவை பயங்கரவாதிகள் தடுப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மணித்துரை என்பவரையும், மதுரையை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ் ஏட்டு செந்தில்குமார் என்பவரையும் அழைத்து வந்து

நேற்று நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தீவிர விசாரணைக்கு பிறகு, நேற்று மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது. கைதான செந்தில்குமார், வெங்கடேசன் எம்.பி.யிடம் பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார். இந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டரும், போலீஸ் ஏட்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com