

சென்னை,
புழல் ஏரிக்கு குளிக்க சென்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அகில்ராம் ( வயது 14) மற்றும் தருண் ஆகாஷ் ( வயது 14). அவர்கள் 2 பேரும் அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கள்ளிக்குப்பம் பகுதி அருகே உள்ள புழல் ஏரிக்கு தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளனர். மாணவர்கள் அனைவரும் ஏரியில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது, அகில்ராம் மற்றும் தருண் ஆகாஷ் இருவரும் ஏரியின் ஆழமான பகுதிக்க சென்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கரையிலிருந்து கூச்சலிட்டனர். ஆனால், அதற்குள் அந்த இரு சிறுவர்களும் தண்ணீருக்குள் மூழ்கி மாயமாகினர்.
இது குறித்து பெற்றோரிடம் மற்ற சிறுவர்கள் கூற, அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஏரியில் தேடும் பணியில் ஈடுபட்டு நீரில் மூழ்கி பலியான 2 சிறுவர்களையும் மீட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.