சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகை பறிப்பு - ஒரு மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகையை பறித்து சென்ற கொள்ளையனை ஒரு மணி நேரத்தில் போலீசார் பிடித்தனர்.
கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி (65 வயது). தனியார் மருத்துவமனை ஊழியர். இவர் நேற்று காலை 8.45 மணியளவில் தன் பேரன்களை தனியார் பள்ளி பேருந்தில் ஏற்றிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரம் ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர் கலைச்செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதை கண்டு அலறிய அவர் கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர் ஸ்கூட்டரில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றார். இது குறித்து கலைச்செல்வி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் தங்க சங்கிலியை பறித்த நபரின் அடையாளங்களை எடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் குப்பம் சாலையில் குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடி அருகில் ஸ்கூட்டரில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த நபரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் ஆந்திர மாநிலம் அன்ந்த்பூர் மாவட்டம் தாடிபத்திரியை சேர்ந்த ஜெகதீஸ்வரர் சுதர்சன்குமார் (28 வயது) என்பதும், மூதாட்டியிடம் நகையை பறித்ததும் அவர் தான் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வழிப்பறி செய்த தங்க சங்கிலியை மீட்டனர். நகை பறிப்பு நடந்த ஒரு மணி நேரத்திற்குள் கொள்ளையனை போலீசார் துரிதமாக செயல்பட்டு பிடித்தனர். இதனிடையே மூதாட்டியிடம் தங்க சங்கிலியை கொள்ளையன் பறித்து சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.






