ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறிப்பு: 2 பேர் கைது

திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு நபரை சமூக வலைதளச் செயலி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், அவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.
ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறிப்பு: 2 பேர் கைது
Published on

திருநெல்வேலி டவுன் கோடீஸ்வரன்நகர் 5-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 44). இவர் சென்னையில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்காகச் சில நாட்களுக்கு முன்பு இவர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

அப்போது சமூக வலைதளச் செயலி (Mobile App) மூலம் வெங்கடாசலத்தைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், அவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதனை நம்பி, பேட்டை மில்கேட் பகுதிக்கு வெங்கடாசலம் சென்றுள்ளார். அங்கிருந்த ஓர் வாலிபர், வெங்கடாசலத்தைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஆள்நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் மற்றொரு வாலிபரையும் அவர்கள் தங்களோடு இணைத்துக்கொண்டனர்.

காட்டுப்பகுதிக்குச் சென்றதும், அந்த 2 வாலிபர்களும் சேர்ந்து வெங்கடாசலத்தை மிரட்டத் தொடங்கினர். அவரிடமிருந்த 5 கிராம் தங்க மோதிரத்தைப் பறித்ததோடு, கூகுள்பே (Google Pay) செயலி வழியாக 20 ஆயிரம் ரூபாயையும் வலுக்கட்டாயமாகப் பறித்தனர். பின்னர் வெங்கடாசலத்தின் செல்போனையும் பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட வெங்கடாசலம் இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பேட்டை கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த அந்தோணி மகன் சக்திசுரேஷ்(23) மற்றும் திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துமாலை மகன் இசக்கிராஜா(19) ஆகிய 2 பேரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த சக்திசுரேஷ், இசக்கிராஜா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருட்கள் குறித்துத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com