

சேலம்,
சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் பூசாரியாக பூலாவரி வாணியர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி (65) பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் அவர் கோவிலுக்கு சென்று பூஜை பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோவில் வளாகத்தில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக பூசாரி தண்ணீர் எடுக்கச் சென்ற நேரத்தில், அந்த நபர் கருவறைக்குள் நுழைந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பூசாரி கருவறைக்குள் சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த நபர் கோவிலுக்கு வெளியே இருசக்கர வாகனத்துடன் காத்திருந்த மற்றொருவருடன் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் பூசாரி சுப்பிரமணி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஓமலூர் பூமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (42), ராமன் (42) ஆகியோர் அம்மன் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.