

கோவை,
சூலூர் சிறுமி வன்கொடுமை கொலை வழக்கில் கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கோவை சூலூர் அருகே கடந்த மே மாதம் 21-ந்தேதி 10 வயது சிறுமி, வீட்டு முன்பு விளையாடி கொண்டு இருந்தாள். இந்தநிலையில் சிறுமி மாயமானார். அந்த சிறுமியை மர்ம நபர்கள் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று உடலை கண்ணம்பாளையம் குளம் அருகே தென்னந்தோப்பில் வீசியிருந்தனர்.
இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்தி (வயது 33), அவருடைய நண்பர் மோகன் (31) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் நடந்து 21 நாட்களில் 39 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக போலீஸிடம் இருந்து தப்ப முயன்ற போது கார்த்திக் கீழே விழுந்ததால் அவருக்கு வது கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோவை போக்சோ நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த நவம்பர் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நவம்பர் 27ஆம் தேதி அதாவது இன்றைக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோவை சூலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக், மோகன்ராஜ் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனை விவரங்கள் வரும் டிச.4ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.