டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் தொடர்ந்த இரு வழக்கு ரத்து

இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் தொடர்ந்த இரு வழக்கு ரத்து
Published on

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக். 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதற்காக அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று அதிமுக சார்பில் 200-க்கும் மேற்பட்ட பதாகைகள், ஏராளமான கட்சிக் கொடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் தூண்டுதலின் பேரில், அக்கட்சியினர் சேதப்படுத்தியதாக அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில், டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கமுதி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டிடிவி.தினகரன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் 12-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பினரும் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, சமரசம் தொடர்பாக இருதரப்பும் இணைந்து மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டிடிவி.தினகரன் மற்றும் புகார்தாரர் முனியசாமி ஆகியோர் (மார்ச் 26-ஆம் தேதி) நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். அதுவரை கமுதி நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக கொடியை சேதப்படுத்தியது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட 2 வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது என்றார். தொடர்ந்து இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாக நீதிபதியிடம் தெரிவித்த நிலையில், வழக்கை ரத்து செய்தார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com