

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர்கள் அகிலேஷ் (28 வயது), தினேஷ் (27 வயது). இவர்கள் இருவரும் பொறியியல் பட்டதாரிகள் ஆவர். இருவரும் வெளிநாட்டு வேலைக்கு செல்வது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். அதன்படி சென்னையைச் சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனத்திடம் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் சிங்கப்பூரில் நல்ல வேலை இருப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியதாக கூறப்படுகிறது. அந்த வேலைக்கு குறைந்த நபர்கள்தான் தேவை. எனவே, உடனடியாக அந்த வேலை கிடைக்க நபர் ஒன்று ரூ.6.5 லட்சம் தர வேண்டும் என கூறியுள்ளனர். ஏஜெண்டுகள் கூறியதை கேட்ட பட்டதாரிகள் வேலை கிடைக்கும் என்ற ஆர்வத்தில் பணத்தை புரட்டிக் கொடுத்துள்ளனர்.
அதன்படி ரூ.6.5 லட்சத்தை பெற்றுக் கொண்ட டிராவல்ஸ் நிறுவனத்தினர், உடனடியாக வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறிவிட்டு, பின்னர் விசா வந்து விடும் பொறுமையாக இருக்கும்படி கூறியுள்ளனர். தொடர்ந்து டிராவல்ஸ் நிறுவனத்தினர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி காலதாமதப்படுத்தி வந்துள்ளனர்.
வேறு வேலைக்கு செல்லலாம் என இருவரும் பணத்தை திருப்பி கேட்டபோது, அந்த நிறுவனத்தினர் தங்களை மோசடி செய்ததை அறிந்து அகிலேசும், தினேசும் மனமுடைந்தனர். பின்னர் இதுபற்றி அகிலேஷ், தினேஷ் இருவரும் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சடகோபன் சீனிவாசன் (60 வயது), சேலத்தைச் சேர்ந்த ரகுமான்கான் (45 வயது) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.